பல்லடம் கொடூர கொலை.. சரமாரி கேள்வி எழுப்பிய பெண்.. பதில் கூறமுடியாமல் திணறிய அமைச்சர்

பல்லடம் கொடூர கொலை.. சரமாரி கேள்வி எழுப்பிய பெண்.. பதில் கூறமுடியாமல் திணறிய அமைச்சர்

பல்லடம் மூவர் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி, திமுக அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருடைய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் சாமிநாதன் திணறிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வருகின்றனர். தெய்வசிகாமணி, அலமேலு தம்பதி தென்னை விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில், உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்வதற்காக கோவையில் இருந்து செந்தில் குமார் அம்மா வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை வந்திருந்தார். மூவரும் இரவு உணவை சாப்பிட்டதும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது, நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரமாக நாய்கள் குரைத்துள்ளன. இதையடுத்து, தெய்வசிகாமணி எழுந்து வெளியே போய் பார்த்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை அரிவாளால் வெட்டினர்.

பின்னர், வீட்டிற்குள் சென்று அலமேலுவையும் செந்தில்குமாரையும் தலைப் பகுதியிலேயே வெட்டியுள்ளனர். இதையடுத்து, கொலைக் கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சவரத் தொழிலாளி வல்பூரான் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது மூன்று பேரும் தலையில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். தெய்வசிகாமணி உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பல்லடம் பகுதி மக்களிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, செந்தில்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் அமைச்சரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.அப்போது, பதில் கூற முடியாமல் அமைச்சர் திணறினார்.

உயிரிந்த செந்தில்குமாரின மனைவி கவிதா அமைச்சரிடம் கூறியதாவது: காவல் துறையினர், தமிழக அரசு நம்மை சும்மா விடமாட்டார்கள் என்ற யோசனை இருந்தாலே இதுபோல கொலைச் சம்பவங்கள் நேராது. இந்தக் கொலைச் சம்பவத்துக்கு முழுக்க முழுக்க உங்களுடைய அரசாங்கத்தின் தப்புதான் காரணம். விவசாயி, விவசாயி என்று கூறி பப்ளிசிட்டி மட்டுமே தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இன்று எங்களுக்கு நடந்தது. நாளைக்கு மற்றவர்களுக்கு நடக்காது என்பது எப்படி நிச்சயம்.

கொலைக் குற்றவாளிகளை பிடிக்கிறீர்கள் என்பதில் பிரச்னை இல்லை. அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரிய வேண்டும். அப்போது தான் மற்ற திருடர்களுக்கு பயம் ஏற்படும். கொலைக் குற்றவாளிக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். எங்களது மாமன், மச்சான் யாருக்கும் எந்தவொரு கெட்ட பழக்கங்களும் இல்லை. அவர்கள் உண்டு, வேலையுண்டு என்று இருப்பார்கள்.

அப்பாவி மூன்று பேரை கொன்றிருக்கின்றனர். நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம். எங்களுடைய நிலையை நினைத்துப் பாருங்கள். எதாவது பிரச்னையில் கொன்றிருந்தால் கூட பரவாயில்லை. அவிநாசிபாளையத்தில் அவ்ளோ பெரிய ஜங்ஷனில் ஒரு கேமரா கூட இல்லை. விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

காவல் துறையினர் மேல் பயம் இல்லை. அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றார்.