தந்தை, மகனை காவு வாங்கிய ஈரோடு கிழக்கு

 தந்தை, மகனை காவு வாங்கிய ஈரோடு கிழக்கு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துது காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூச்சு திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மாத இறுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து விசாரித்து வந்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்து உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 75. சரியாக காலை 10.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்ற, ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, காலியான அந்த தொகுதியில் 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், அந்த தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், அவரும் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகன் மற்றும் தந்தை, அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன், தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஈரோட்டில் பிறந்த இவர், சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வகித்துள்ளார். 1984,1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், 1996ல் மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

2004 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு (214477) வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வானார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவியேற்றார்.

இருப்பினும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். கூட்டணியில் இருந்த திமுக உடன் இணக்கமான உறவை கொண்டிருக்காததே அவரது தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.

தொடர்ந்து, 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தேனி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியையே தழுவினார்.

மகன் இடத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதன் பிறகு 2023 ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இதையடுத்து காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் களமிறங்கி அபார வெற்றி பெற்றார்.