ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு இன்னொரு ஜாக்பாட்....!?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அந்த தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
தொடர்ந்து கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வந்தார். இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்த போதும் நோயின் தீவிரம் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார்.
இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பிற்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை அடுத்து தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்ய தொடங்கும். மேலும் திமுக இந்த தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குமா? அல்லது அந்த கட்சியே போட்டியிடுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் இளங்கோனின் இளைய மகன் சஞ்சய் போட்டி இடுவதாக கூறப்பட்டாலும் ஏற்கனவே தந்தை மகன் என இருவரையும் காவு வாங்கிய தொகுதியாக இது இருப்பதால் அவர்கள் குடும்பத்தினர் போட்டியிட தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. மற்றவர்களுக்கும் அந்த நெருடல் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் ஒரு வருட எம்.எல்.ஏ. பதவிக்கு ஏன் உயிரை விட வேண்டும் என்கிற அச்சம் பலருக்கும் இருப்பதால் சீட் கேட்டு யாரும் அலைய மாட்டார்கள் என்கிற கருத்தும் நிலவுகிறது.
ஜனநாயகத்திற்கு இந்த தொகுதி மக்கள், தமிழக அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர் செய்த மிகப்பெரிய துரோகத்திற்கு தான் இந்த தண்டனை இளங்கோவனின் மரணம் என்று வைத்துக் கொண்டாலும் இன்னொரு இடைத்தேர்தலில் மீண்டும் அப்படி ஒரு நிலை வராது என்று சொல்வதற்கு உத்தரவாதம் இல்லை.
.