அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
சில சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது பேசத்தெரியாமல் அல்ல எதையும் பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பது பிரச்னைகளை பெரிது பண்ணாது. சில நேரங்களில் பிரிந்து செல்வது என்பது எளிது. அம்மாதிரியான நேரங்களில் அமைதி காப்பது மிகவும் அவசியம். அலைபாயும் மனதை அமைதிப்படுத்த பொறுமை அவசியம். எல்லோரிடமும் பேசவேண்டும். ஆனால் அளவோடு பேசுவது நல்லது. அதிகமாக பேசினால் பிரச்னைகள் வரும்.
காரசாரமாக வாக்குவாதம் செய்யும்பொழுது அல்லது சண்டையிடும் பொழுது உணர்ச்சிகள் தடித்து நம்மை அறியாமல் கடினமான வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கி விடுவோம். அது பெரும்பாலும் மோதலுக்கு வழிவகுப்பதுடன் மன அமைதியையும் கெடுத்து விடும். எனவே இம் மாதிரியான சமயங்களில் அமைதியாக இருப்பது என்பதே நல்லது.
ஏதாவது விவாதம் நடைபெறும் பொழுது நம்மை மதித்து கருத்துக்கள் கேட்காதவரை நாம் அமைதி காப்பது நல்லது. நாமாகவே வலிய சென்று கருத்து சொல்கிறோம் என்று நுழைந்தால் நம் மனம் காயப்படும் வகையில் ஏதேனும் நிகழ்ந்துவிடும்.
எனவே நம்மை கேட்காத வரையில் நம்முடைய கருத்துக்களை சொல்லாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத இடங்களில் வாயைத் திறக்காமல் அமைதியாக இருப்பது மரியாதையான ஒன்றாக பார்க்கப்படும்.
அமைதி இல்லாத மனதுக்கு சின்ன மணல் கூட பெரும் பாறையாகத் தெரியும். மனம் தெளிவாக இருக்கும்போது தடைகள் கூட படிக்கற்களாக மாறி நம்மை மேலே உயர செல்ல உதவும். கோபம், வருத்தம், படபடப்பு, சந்தோஷம், கவலை போன்றவை எல்லாமே நம் உணர்ச்சிகளின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தான்.
இவை வெளிச்சூழ்நிலைகளால் தூண்டப்பட்டு வெளிப்படுத்தப்படுகிறது. அதுவே நாம் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள பழகிவிட்டால் பிரச்னைகள் வெடிக்காது. அதாவது மனம் அமைதியாக இருந்தால் எதுவும் பிரச்னையாகத் தெரியாது.
உள்ளே அமைதியாக இருந்தால் மனம் முழு விழிப்புணர்வுடன் எதையும் சந்திக்க தயாராக இருக்கும். எப்பொழுதெல்லாம் நம் மன அமைதி கலைக்கப்படுகிறது தெரியுமா? நாம் எதிர்பார்த்தபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாத பொழுது நம் மன அமைதி குறைகிறது. கோபம் வருகிறது. நம்மை யாரேனும் எதிர்த்து கேள்வி கேட்டால், நாம் சொல்வதை பணிந்து ஏற்காமல் இருந்தால் அமைதியற்று போகிறோம்.
அதுவே எங்கே மனிதர்கள் நமக்கு பணிந்து செல்கிறார்களோ, எதிர் கேள்வி கேட்காமல் இருக்கிறார்களோ அங்கே நாம் அமைதியாக உணர்கிறோம். அதாவது நம் அகங்காரத்திற்கு தீனி போடுபவர்களிடம் மனம் அமைதி காக்கிறது. இது சரியான போக்கல்ல.
வெற்றிக்கு உதவும் மனப்பான்மை இப்படித்தான் இருக்க வேண்டும்!
நம் மனநிலையை அமைதியாக வைத்திருக்க தவறியதால்தான் இவ்வளவு குழப்பங்களும். நமக்குள் இருக்கும் சக்தியை ஒழுங்காக கட்டுப்படுத்தி செயல்படுத்த கற்றுக்கொண்டால் மனம் முழு அமைதி பெறும்.
அப்படி உள்ளே அமைதியாக இருக்க நாம் யோகாவும், தியானமும் செய்யப் பழகினால் நம்முள் இருக்கும் சக்தி சிதறாமல் கட்டுக்கோப்புடன் நம் மனதை அலைக்கழிக்காமல் வைத்துக் கொள்ள உதவும்.