சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப்பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்புகள் அருகில் உள்ள தனியாா் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தரப்படும் என தனியாா் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீா்மானத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கத்தின் தொடக்க விழா சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் வரவேற்றுப் பேசினாா். தலைவா் பி.டி.அரசகுமாா் தலைமை வகித்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு சங்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: தனியாா் பள்ளிகள் சங்கத்துக்கு எனது வாழ்த்துகள். 'கல்வியில் சிறந்த தமிழகம்' என்பதில் அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாது, தனியாா் பள்ளிகளின் பங்களிப்பும் உள்ளது.
தனியாா் பள்ளிகள் பங்களிப்பு தேவை: சங்கம் நடத்துவது மிகவும் சாதாரண காரியம் அல்ல, மாணவா்களின் நலனுக்காக, அவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு தனியாா் பள்ளி நிா்வாகத்துடன் அரசு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தனியாா் பள்ளிகள் சங்கம் 9 வகை கோரிக்கைகளை அளித்துள்ளது. அவற்றை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தனியாா் பள்ளிகள் புதிய ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் சமுதாயத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையோடு மிகப் பெரிய பணியைச் செய்து வருகிறது. தனியாா் பள்ளிகளின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இயலாது.
முதல் கட்டமாக வரும் கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியாா் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிப்ரவரியில் மாநாடு... தனியாா் பள்ளிகளுக்கு தமிழக அரசு அங்கீகாரம் மட்டுமல்ல தனியாா் பள்ளி மாணவா்கள் செய்யும் சாதனைகளையும் அங்கீகரித்து பாராட்டும் அரசாக இந்த அரசு உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெற்றோா் ஆசிரியா் கழக மாநாடு வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளது. தனியாா் பள்ளிகள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றத் தேவையான சாத்திய கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தனியாா் பள்ளிகள் அரசுப் பள்ளிக்கு வருகை தந்து அரசுப் பள்ளியில் நடைபெறும் கல்வி கற்றல் நிலையைப் பாருங்கள். அரசுப் பள்ளி நிா்வாகம் தனியாா் பள்ளிக்கு வருகை தந்து அங்குள்ள கற்றல் திறனைப் பாா்வையிடுவா். நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் நம் மாணவா்களுக்கு கொண்டு சென்று மேலும் சிறப்பான கல்வியைக் கற்றுத் தருவோம் என்றாா் அவா்.
இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை செயலா் சோ.மதுமதி, தனியாா் பள்ளி இயக்குநா் மு. பழனிச்சாமி, தொடக்கப்பள்ளி இயக்குநா் பு.ஆ.நரேஷ், தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சங்கத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்
1.பள்ளியிலிருந்து மாணவன் வேறுபள்ளிக்கு மாறும் போது படித்த பள்ளியில் இருந்து கட்டண பாக்கி ஏதும் இல்லை என N O C பெற வேண்டும்.
2. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை CBSE பள்ளிகளில் உள்ளது போல் புதுப்பித்தல் அங்கீகாரம்.
3. தகுதியான நர்சரி பள்ளிகளை நடுநிலைபள்ளியாக தரம் உயர்த்துதல்.
4. நிரந்தர அங்கீகாரம் தகுதியின் அடிப்படையில் வழங்குதல்.
5. பள்ளிகளுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றுதல்.
6. DTCP பெறுவதில் உள்ள குழப்பங்களை நீக்குதல்.
7. நிலுவையில் உள்ள RTE கல்வி கட்டண பாக்கியை உடனடியாக விடுவிக்க வேண்டுதல் உள்ளிட்ட 9 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது .
கல்வி செயலாளர் அறிவிப்புக்கள்...
1.DTCP பிரச்சனை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கலந்து ஆலோசித்து விரைவில் தீர்வு
2.தொடர் அங்கீகாரம் விரைவில் தொய்வின்றி வழங்கப்படும்.
தனியார் பள்ளிகள் கல்வி இயக்குனரின் அறிவிப்புக்கள்
1.சிறப்பு வகுப்புகள் நடத்த பெற்றோரின் ஒப்புதல் கடிதம் மட்டுமே போதும்.
2.மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகளுக்கு மாதம் ஒரு முறை மட்டுமே கூட்டம் நடத்துவார். என்கிற அறிவிப்புகள் மேடையிலே அறிவிக்கப்பட்டது.