ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுகவின் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத் தேர்தலை புறக்கணித்துள்ளன.
இதனால் இந்த இடைத்தேர்தலில் திமுகவின் அணுகுமுறையும் நிச்சயம் மாறுதலை சந்திக்கும் என்கிறார்கள் ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள்.
கடந்த 2023ல் திருமகன் ஈவேரா மறைந்த பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக இடைத்தேர்தலில் களமிறங்கினார். அவருக்கு எதிராக அதிமுகவின் தென்னரசு போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலில் வழக்கமான பார்முலா படி திமுக அமைச்சர்கள் களமிறங்கினர். 12 அமைச்சர்களையும், 19 மாவட்டச் செயலாளர்களையும் தேர்தல் பணிக்குழுவாக நியமித்தார் ஸ்டாலின்.
தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக்கே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு, எ.வ. வேலு, செந்தில் பாலாஜி ஆகியோர் திரண்டனர்.
மேலும், சிறிய தொகுதியான ஈரோடு கிழக்கில் வார்டு வார்டாக அமைச்சர்கள் பங்கு போட்டுக் கொண்டு செலவுகளை செய்தனர். ஒவ்வொரு அமைச்சரும் தான் பொறுப்பு எடுத்துக் கொண்ட பகுதியில் அதிக ஓட்டுக்களை பெற்று காண்பிக்க வேண்டும் என்பதற்காக, போட்டிப் போட்டுக்கொண்டு பரிசுப் பொருள்களை வழங்கினர். செந்தில் பாலாஜி கடைசி நாளில் தன்னுடைய பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச்களை இறைத்தார்.
ஞாயிற்றுக்கிழமையானால் சிக்கன், மட்டன், தினமும் காலை 500 ரூபாய் மாலை 500 ரூபாய் என ஈரோடு கிழக்கில் கரன்சி ஆறு கரைபுரண்டு ஓடியது.
இது மட்டுமல்ல அமைச்சர்கள் ஈரோடு நகரிலும் புறநகர் பகுதிகளிலும் வீடு பிடித்து தங்கி இரவு பகலாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் சில அமைச்சர்களுக்கு உணவு சரிவர ஒத்துக்கொள்ளாமல் போனதால் வாந்தி பேதி ஆனவர்களும் உண்டு.
இப்படி எதிர்க்கட்சிகளின் கடுமையான பண புகாருக்கிடையே ஈரோடு கிழக்கு இடை தேர்தல் 2023 இல் நடந்து, அதில் இளங்கோவன் வெற்றி பெற்றார். எப்படியும் செலவு 100 கோடியை தொட்டிருக்கும் என்று அப்போதே முக்கிய அமைச்சர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
அந்த காட்சிக்கு நேர் மாறாக அமைந்திருக்கிறது இப்போதைய இடைத்தேர்தல் காட்சி.
ஜனவரி 12-ஆம் தேதி நடந்த தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் லோக்கல் அமைச்சர் முத்துசாமி மட்டுமே கலந்து கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்பி. பிரகாஷ், அறிவாலயத்தில் இருந்து அமைப்பு துணைச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் கலந்துகொண்டனர். செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களும் வரவில்லை.
ஜனவரி 11-ஆம் தேதி வேட்பாளரை அறிவித்த நிலையில், அமைச்சர் முத்துசாமி மட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
ஏன் முக்கிய அமைச்சர்கள் வரவில்லை என்று திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்த போது,
"இந்த இடைத்தேர்தலில் அதிமுக அல்லது பாஜக இவர்களில் யாராவது ஒருவர் போட்டியிட்டு இருந்தால் கூட எங்களுக்கு வழக்கமான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால், எதிர்க்கட்சிகள் யாருமே இப்போது போட்டியில் இல்லை. நாம் தமிழர் கட்சி மட்டும் தான் போட்டியிடுகிறது என்கிற நிலை.
இந்த சூழ்நிலையில், கடந்த முறை போல அமைச்சர்கள் படையும் அளவுக்கு அதிகமான பணமும் இந்த இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டாம் என முதலமைச்சர் நினைக்கிறார். இதை அமைப்புத் துணைச் செயலாளர் அன்பகம் கலையே நேற்று ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
எதிரிகள் யாரும் இல்லாத இடத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டு இடைத்தேர்தல் பணிகளை செய்வது சரியாக இருக்காது .
எனவே தேர்தல் பணிகளை லோக்கல் அமைச்சர் முத்துசாமி மற்றும் செந்தில் பாலாஜி உள்ளிட்ட கொங்கு வட்டார அமைச்சர்கள் கவனிப்பார்கள். மற்ற முக்கிய அமைச்சர்கள் அவ்வப்போது வந்து ஆலோசனைகள் சொல்லலாம். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுரை.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்றாலும் அப்பகுதியில் ஓரளவு செல்வாக்கு மிக்க பாமக போட்டியிட்டது. எனவே அங்கே அமைச்சர்கள் கடும் பணி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால், ஈரோடு கிழக்கில் அப்படி ஒரு சூழலும் இல்லை.
இதன்படி கடந்த இடைத்தேர்தலில் நடந்த அமைச்சர்களின் அதிரடிகள் இந்த இடைத்தேர்தலில் அவ்வளவாக இருக்காது. இதை அறிந்து அமைச்சர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். சில அமைச்சர்கள் அதிமுகவுக்கு நன்றி கூட தெரிவித்திருக்கிறார்கள்" என்கின்றனர்.
ஆக இரட்டைப் பொங்கல் கொண்டாடலாம் என்று நினைத்திருந்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு சற்று வருத்தம்தான்!