பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
பாஜக கட்சிக்கு பொதுவாக 3 வருடங்களுக்கு ஒருமுறை தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது.
தற்போது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. கிளை நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மாவட்ட தலைவர்கள் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்ததாக புதிய மாநில தலைவர் தேர்வு செய்வதற்காக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் புதிய தலைவர் தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளதால், வலிமையான தலைமை வேண்டும்.என்று அனைவரும் விரும்புகின்றனர்.
கட்சியின் விதிமுறைப்படி இரண்டு முறை ஒருவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கலாம். அந்த வகையில், அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தலைவர் பதவியை குறிவைத்து மேலும் ஒன்றிரண்டு பேர் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுகவை எதிர்கொள்ள வலிமையான தலைமை தேவை என்ற அடிப்படையில் டெல்லி மேலிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
சென்னை வரும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முதல் 3 பேர் பெயர் பட்டியலை தேர்வு செய்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்ப உள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வார இறுதிக்குள் புதிய மாநில தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பை டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பக்கம் மாநில தலைவராக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு வாய்ப்பு குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.