வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
ஊரெல்லாம் மதுக்கூடங்களை திறந்து விட்டு, போதைப்பழக்கத்துக்கு எதிராக, 'டிவி'யில் விளம்பரங்கள் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி, முதல்வர் ஸ்டாலினுக்கு கோவையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. மதியம், 12:00 முதல், இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன. இதன் அருகாமையிலேயே மதுக்கூடங்கள் (பார்) நடத்தப்படுகின்றன. சமீபகாலமாக, மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எப்.எல்., 2 உரிமம் வழங்கப்படுகிறது. கிளப் என்ற பெயரில் நடத்தப்படும் இம்மன்றங்கள் காலை, 11:00 முதல், இரவு, 11:00 மணி வரை செயல்படுகிறது.
மதுபானம் வழங்குவது மட்டுமின்றி, பாட்டு, டான்ஸ் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.
இச்சூழலில், போதைப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பேசும் வீடியோ, 'டிவி' சேனல்களில் விழிப்புணர்வு விளம்பரமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது, மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'திராவிட இயக்க உணர்வாளன் என்கிற முறையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் ஆட்சிக்கு வந்தபின், மாநிலம் முழுவதும் எப்.எல்., 2 மற்றும் எப்.எல்., 3 பார்களை ஏராளமாக திறந்திருக்கிறீர்கள். அவ்வாறு திறந்து விட்டு, 'டிவி'யில் மது விலக்கு பிரசாரம் செய்வதை பொதுமக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். அதனால், மதுவிலக்கு தொடர்பாக, 'டிவி'யில் நீங்கள் பிரசாரம் செய்வதை நிறுத்துங்கள்' என, குறிப்பிட்டுள்ளார்.