பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த விபரீதம்.... ! செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது குழந்தை பலி..!!
விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழனிவேல், சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த பள்ளியில் கழிவறை அருகே செப்டிக் டேங் அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூடி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதன் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி லியா லட்சுமி சேதமடைந்த இரும்பு மூடி மேலே ஏறி நின்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர் பாராத விதமாக சிறுமி கழிவு நீர் தொட்டியின் உள்ளே விழுந்திருக்கிறார்.
மற்ற குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியர்கள் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உள்ளே விழுந்த சிறுமி விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி நிர்வாகத்தின் கவன குறைவு காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக உயிர்ழந்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.