புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் TPSA மாநில செயற்குழு கூட்டம் திருச்சி அம்மாபேட்டை, மணப்பாறை ரோடு JJ Engineering Collegeல் 10.01.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் பி. டி. அரசகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார், டி. சி. இளங்கோவன், மாநில பொருளாளர் ஜி. ஆர். ஸ்ரீதர், கொள்கை பரப்பு செயலாளர் ஐன்ஸ்டீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட செயலாளர் மனோகரன் ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ. ஆறுமுகம் நன்றி கூறினார். இதில் மாநிலம் முழுக்க உள்ள மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விக்ரவண்டி செயின்ட் மேரிஸ் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவி லியா லட்சுமிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் இது போன்ற சம்பவம் வேறு எந்த பள்ளியில் நடக்காதவாறு பாதுகாப்பதற்காக தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக தனி கமிட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் இது போன்ற குறைகள் தீர்க்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு என்று தனியாக தனியார் பள்ளிகள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள RTE கல்விக் கட்டண பாக்கியை உடனே விடுவிக்க வேண்டும்.
பள்ளி கட்டிடங்களுக்கான வரைபட அனுமதி பெறுவதற்காக வரையறுக்கப்பட்ட பகுதி வரையறுக்கப்படாத பகுதி Planing area Non Planning area என்பதை மாற்றி அனைத்து பகுதி பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான டி டி சி பி அனுமதி 2022 வரை கட்டி முடிக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களுக்கும் வழங்க வேண்டும்.
பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்குவதை மாற்றி துவக்க அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான அனைத்து பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
இலவச கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு பெற்று LKG வகுப்பில் சேர்கின்ற மாணவன் எட்டாம் வகுப்பு வரை இடைவிடாமல் படிப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கும் எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கான அங்கீகாரம் வழங்க வேண்டும்.
சைதன்யா, நாராயணா போன்ற கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளைத் துவக்கி கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பணிகளையும் நசுக்க முயற்சித்து வருகிறது. இவற்றை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் அனுமதியுடன் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும்.
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிபிஎஸ்இ உள்ளிட்ட பிறவாரிய பள்ளிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் ஆணை வழங்குவது போல தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் ஆணை வழங்க வேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.