TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
இந்தியாவின் மாபெரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்யும் கனவுடன் களத்தில் இறங்கிய டாடா குழுமம், ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை நிறுவிய கையோடு ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்தம் கைபற்றி ஐபோன் தயாரிப்பில் மிகப்பெரிய வர்த்தகத்தையும், அனுபவத்தையும் பெற்றது.
கடந்த 4 வருடமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கான பணிகளை மட்டுமே செய்து வரும் வேளையில், சமீபத்தில் விஸ்திரான் நிறுவனத்தின் கைப்பற்றியது மூலம் ஐபோன் அசம்பிளி செய்யும் முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்தது. இப்படி அனைத்தும் ஆப்பிள் உடன் நிற்கிறது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கான முக்கிய சப்ளையராக இருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ், தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய பாதைகளைத் தேடி வருவதாக ஈடி தெரிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் சியோமி மற்றும் ஒப்போ உள்ளிட்ட முக்கிய சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடன் கூட்டணி அமைப்பதற்கான தீவிரமான பேச்சுவார்த்தைகளை நிறுவனம் நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்த முக்கியமான நகர்வு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மட்டுமே எப்போதும் சார்ந்து இருப்பதை விரும்பவில்லை என்பதை உறுதி செய்வது மட்டும் அல்லாமல் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகள் (EMS) துறையில் பாக்ஸ்கான் போல் முன்னணி நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்ற அதன் கனவை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வரும் வேளையில், இந்தியாவில் புதிய உற்பத்தியாளர்களைத் தேடி வருகிறது. இந்த சூழ்நிலையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் அதிக அளவிலான ஒப்பந்தத்தைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆப்பிள் நிறுவனத்துடன் வலுவான உறவை ஏற்படுத்தியிருந்தாலும், ஒரே ஒரு வாடிக்கையாளரை மட்டுமே சார்ந்து செயல்படுவதைக் குறைக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறது. ஷியோமி மற்றும் ஒப்போ போன்ற முன்னணி சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் கூட்டு சேர்வதன் மூலம், டாடா எலக்ட்ரானிக்ஸ் அதன் உற்பத்தி அளவை கணிசமாக அதிகரிக்கவும், அதன் சப்ளை செயினில் பெரும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். இதன் மூலம் டாடா எலக்ட்ரானிக்ஸ் தற்போது டிக்சன் நிறுவனத்துடன் நேரடியாக போட்டிப்போட துவங்கியுள்ளது. சமீபத்தில் விவோ - டிக்சான் உற்பத்திக்கான புதிய கூட்டணியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் வெறுமென அசம்பிளி பணிகளை தாண்டி தனது மதிப்புச் சங்கிலியை விரிவாக்கம் செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. இதன்படி ஸ்மார்ட்போன்களுக்கான கேமரா மாட்யூல்கள் மற்றும் டிஸ்ப்ளே மாட்யூல்கள் போன்ற மிகவும் சிக்கலான உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்வதில் முதலீடு செய்து வருகிறது.
இதனால் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள தனது நிறுவனத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முயற்சித்து கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு நிறைய பணியாட்கள் தேவைப்படுவதால் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஊராட்சிகள் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இரு பாலருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தனது பணியை வேகப்படுத்தி வருகிறது.
இதனால் இவ்விரு மாவட்ட மக்களுக்கும் நல்ல வாய்ப்புகள் காத்துள்ளது.