புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!

 புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!


தேசிய கல்விக் கொள்கையை சில அரசியல்வாதிகள் தீவிரமாக எதிர்த்து வருவதை, தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஆனால், எதிர்ப்புக்காக முன்வைக்கப்படும் வாதங்களில், கட்டுக்கதைகள் தான் அதிகம் இருக்கின்றன.

இதில், அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உரியது, தேசிய கல்விக் கொள்கை நஞ்சு என்பது போல அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது தான். ஒரு சிறந்த மாநிலத்தின் முதல்வர், லட்சக்கணக்கான பெற்றோரையும், மாணவர்களையும் தவறுதலாக வழிகாட்டும் விதத்தில் இப்படி நேர்மையற்ற முறையில் அறிக்கையை எப்படி வெளியிடலாம் என்பது புரியவில்லை.

இன்றைய உலக அளவிலான கல்விச் சூழலில் இந்தியாவுக்கு தேசிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். ஏனெனில், வேகமாக மாறி வரும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு, புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டங்களால் தான் ஈடுகொடுக்க முடியும்.

அவற்றை செயல்படுத்தினால் தான், நம் இளைஞர்களால் மாறி வரும் உலகத்தில் போட்டி போட முடியும். அதனால், அரசியல் கட்டுக்கதைகள் பற்றிய உண்மையை பெற்றோரிடம் தெரிவிப்பது அவசியமாகிறது.

கட்டுக்கதை 1

இந்த கொள்கை, தமிழக மக்கள் மீது ஹிந்தியை திணிக்கிறது.

விளக்கம்: எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று கொள்கை தெளிவாக குறிப்பிடுகிறது. பள்ளிகளில் தாய்மொழி அல்லது மாநில மொழி வழி கல்வியை பின்பற்ற வேண்டும் என்கிறது. மாநிலங்களே தங்களது தேவைக்கும், சூழலுக்கும் ஏற்ப சில திட்டங்களை வடிவமைத்துக் கொள்ள முழு சுதந்திரமும், நெகிழ்வு தன்மையும் இந்த கொள்கையில் உள்ளது.

கட்டுக்கதை 2

மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை சுமையானது.

விளக்கம்: மும்மொழிக் கொள்கை என்பது, இரு இந்திய மொழிகளுடன் ஒரு வெளிநாட்டு மொழியை கற்க வாய்ப்பு அளிப்பதாகும். இதில், எந்த மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

நம் மாநிலத்திலேயே தனியார் சி.பி.எஸ்.இ., உட்பட பிற பாடத் திட்டங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் மும்மொழி திட்டத்தில் தான் கல்வி பயில்கின்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பை நாம் ஏன் மறுக்க வேண்டும்?

கூடுதலாக ஒரு மொழியை கற்பதால் நம் மாணவர்கள் எதை இழக்கின்றனர்? அல்லது அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கற்க திறன் இல்லை என்று, மாநில அரசே முடிவு செய்துவிட்டதா?

வேலைக்கும், வர்த்தகத்திற்கும் நாட்டின் பிற பகுதிகளில் குடியேறுவதும், சென்று வருவதும் சகஜமாகிவிட்ட காலம் இது. இக்காலத்தில் வெறும் ஆங்கிலம் மட்டும் கூடுதல் மொழியாக மேல்மட்டங்களில் அலுவல் வேலை செய்பவர்களுக்கு போதுமானதாக இருக்கலாம்.

ஆனால், குண்டூரில் உள்ள மிளகாய் வியாபாரியிடமும், பரூக்காபாதில் உள்ள உருளைக்கிழங்கு வியாபாரியிடமும் பேச ஆங்கிலம் உதவுமா?

'ஒரு மொழியை கற்றுக்கொள். அதனால், நீ போர் மூளாமல் தவிர்ப்பாய்' என, ஓர் அரபு பழமொழி இருக்கிறது. போரை தவிர்க்காவிட்டாலும், பல மொழிகளும் கலாசாரங்களும் நிறைந்த நம் நாட்டை புரிந்துகொள்ள, மூன்றாவது மொழி எவ்வளவு வசதியாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

கட்டுக்கதை 3

மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி, மாணவர்கள் வடிகட்டப்படுவர்.

விளக்கம்: இது உண்மையே அல்ல. மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களே அந்த தேர்வுகளை நடத்த வேண்டுமேயன்றி, மேல் வகுப்புக்கு மாணவர்கள் செல்வதை தடுப்பதற்காக அல்ல. தேர்வு முறைகளை மாநிலங்களே தங்கள் சூழலுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். தற்போது உள்ளதை போல் 10-வது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.

கட்டுக்கதை 4

‛குலக்கல்வி' முறையை தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது.

விளக்கம்: தொழிற்கல்வி முறைக்கும், 70 ஆண்டுகளுக்கு முன் ஈ.வெ.ரா., விமர்சித்த குலக்கல்வி முறைக்கும் இடையிலான வேறுபாட்டை, கற்றறிந்த அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளாதது வேதனையளிக்கிறது.

ஒரு தொழில் திறனோடு பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவருக்கு சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் ஏற்படும். இளைஞர்களின் ஆற்றலையும், படைப்பு திறனையும் முழுமையாக வெளிக்கொணரச் செய்யக்கூடியது தொழில் கல்வி.

இந்தியாவில் தொழில் கல்வி பெறும் இளைஞர்கள், 10 சதவீதம் மட்டுமே. ஆனால், கொரியாவில் 96 சதவீதம் பேரும், ஜப்பானில் 80 சதவீதம் பேரும், ஜெர்மனியில் 75 சதவீதம் பேரும், பிரிட்டனில் 68 சதவீதம் பேரும் தொழில்கல்வி பெறுகின்றனர்.

கட்டுக்கதை 5

நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது.

விளக்கம்: அரசியல் அமைப்பு சட்டத்தில், கல்வி பொது பட்டியலில் உள்ளது. அதில், தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக, கல்வியில் தேவையான மாற்றங்களையும், கொள்கைகளையும் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கை, முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 676 மாவட்டங்களில், 6,600 வட்டாரங்களில், 2.50 லட்சம் கிராம ஊராட்சிகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, நாடு முழுதும் நுாற்றுக்கணக்கான கருத்தரங்குகள், கூட்டங்கள் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டன.

அதன் பிறகே இறுதி வடிவம் பெற்றுள்ளது. இறுதி வடிவம் பெற்ற கொள்கை திட்டத்தில், பெரும்பாலான மாநிலங்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப கூறியுள்ள யோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன. இவ்வளவு நடைமுறைகளை மேற்கொண்டுள்ள போது, கூட்டாட்சி தத்துவம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுவது ஏன்?

மேலும், தேசிய கல்விக் கொள்கை பரந்துபட்ட அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் கொண்ட ஒரு கொள்கை ஆவணம். அதை அப்படியே ஏற்று செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

மாநிலங்கள் தங்களது பிரதேசங்களின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி செயல்படுத்தலாம்.

கட்டுக்கதை 6

இந்த கல்விக் கொள்கையில் சமூக நீதிக்கு இடமில்லை.

விளக்கம்: இந்த கொள்கை, தனிநபர்கள் தங்களது கல்வி இலக்கை அடைய சமமான வாய்ப்பு கிடைக்க வழி செய்கிறது. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் அனைவரும் எளிதாக அணுகி, சமமாக சேருவதற்கு பல்வேறு முன்முயற்சிகளை கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.

பாலின சமத்துவ நிதி, தேசிய உதவித் தொகைக்கான இணையவாசல், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான சிறப்புக் கல்வி மண்டலங்களை அமைத்தல் ஆகிய பரிந்துரைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

'தேசிய கல்விக் கொள்கை மூலம் மேட்டுக்குடியினரும், வசதியானவர்களும் மட்டுமே பயனடைவர்' என்று ஒரு தலைவர் கூறுகிறார். கற்றறிந்த ஒருவரிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு கருத்து வருவது துரதிர்ஷ்டவசமானது. மேலும் அது தவறான, திசை திருப்பும் தகவல்.

கட்டுக்கதை 7

மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும்.

விளக்கம்: இந்த கொள்கையில் இட ஒதுக்கீடு பற்றிய பகிரங்கமான குறிப்பு ஏதும் இல்லை. ஆனால், இட ஒதுக்கீட்டை நிராகரிக்கும் குறிப்பு ஏதும் இல்லை. ஏனெனில், இட ஒதுக்கீடு தனி சட்டத்தின் கீழ் வருகிறது. தற்போதைய ஒதுக்கீட்டு முறை நீடிக்கும் என்ற அனுமானத்தில் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கேள்வி எழுந்த போது, 'தற்போதைய இட ஒதுக்கீட்டு கொள்கை எந்த காரணத்திற்காகவும் நீர்த்துப் போகாது' என்று மத்திய கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

கட்டுக்கதை 8

கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கவும், கல்வியை வணிகமயமாக்கவும் இக்கல்விக் கொள்கை ஊக்கமளிக்கிறது.

விளக்கம்: இப்போதே ஏராளமான கல்வி நிறுவனங்கள் கல்வி, நிர்வாகம் ஆகியவற்றில் தன்னாட்சி அதிகாரம் பெற்று இயங்குகின்றன. தன்னாட்சி அதிகாரம் பெறுவது மட்டுமே வணிகமயமாக்கலுக்கு வழிவகுத்துவிடாது.

முறையான கட்டுப்பாடுகள் இல்லாதது தான் வணிகமயத்திற்கு முக்கிய காரணம். அவற்றை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது.

நம் கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்பு பெறுவதற்கும் மிகவும் இன்றியமையா தேவைகளில் தன்னாட்சி ஒன்றாகும்.

புதிய பாடத் திட்டங்களை வடிவமைப்பது, சிறந்த படிப்புகளை அறிமுகம் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது, மதிப்பீட்டு முறைகளை வகுத்துக் கொள்வது, கல்விக் கூட்டுச் செயல்பாடுகளை மேற்கொள்வது போன்றவற்றுக்கு தன்னாட்சி வகை செய்கிறது.

கட்டுக்கதை 9

இந்த கொள்கை அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் அமைய ஊக்கமளிக்கிறது.

விளக்கம்: கல்வி துறையில் தனியாரின் பங்களிப்பு என்பது நம் நாட்டிற்குப் புதியதல்ல. 80 சதவீதத்திற்கும் மேலான கல்லுாரிகளும் 40 சதவீதத்திற்கும் மேலான பள்ளிகளும் தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படுபவையே.

இந்த கல்வி கொள்கை 2030ம் ஆண்டுக்குள், பள்ளிகளில் சேருவதை 100 சதவீதமாக உயர்த்துவதற்கும், உயர்கல்வியில், 2035ம் ஆண்டுக்குள் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய மாணவர் சேர்க்கையை விட இரு மடங்காகும்.

தனியார் நிறுவனங்களின் தீவிர பங்களிப்பு இல்லாமல் இந்த இலக்கை அடைவது, நடைமுறை சாத்தியமில்லாதது. எனவே, கல்வியில் முதலீடு செய்வதற்கு தனியார் பெரு நிறுவனங்களை துாண்டும் விதத்தில் தேவையான கொள்கை வழிகாட்டுதல்களும் சலுகைகளும் மிகவும் முக்கியமானவை.

கட்டுக்கதை 10

கல்வி கொள்கையின் பல லட்சிய திட்டங்களை நிறைவேற்ற இயலாது.

விளக்கம்: அப்படி செயல்படுத்த இயலாத திட்டங்கள் எதுவுமே கூறப்படவில்லை. 'வேர் தேர் இஸ் எ வில் தேர் இஸ் எ வே' (உறுதி இருந்தால் வழி பிறக்கும்) என்பது ஆங்கில பழமொழி. அனைவருக்கும் சின்னம்மை தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை என்று நினைத்திருந்தோமானால் இன்று சின்னம்மையை ஒழித்திருக்க முடியாது.

கூட்டாட்சி அமைப்பில், கல்வி கொள்கையின் லட்சியங்களை அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியால்தான் எட்ட முடியும்.

மாறி வரும் சூழலை எதிர்கொண்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போட்டிபோட நம் மாணவர்களை தயார் செய்வதற்கு தேசிய கல்வி கொள்கை அவசர தேவை.

அரசியல் லாபத்திற்காக திரிப்பு வாதங்களை முன்வைத்து, இளைஞர்களின் எதிர்காலத்தில் விளையாடாமல் தேசிய கல்வி கொள்கை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். காலம் தாழ்த்தினால், தமிழகத்தில் உயர்கல்விக்கு பல்வேறு சிக்கல்கள் நேரிடும்.

மாண்புமிகு முதலமைச்சர் கூறியிருப்பது போல் தேசிய கல்வி கொள்கை நஞ்சல்ல, நன்மருந்து.


Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி அருகே உள்ள துவாரகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அபாகஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
படம்