பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது; மிக ஆபத்தானது.!நீதி மன்றங்களின் எல்லையை மீறி வழங்கப்பட்ட தீர்ப்பு.!!
தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் வழங்காத காரணத்தினால், அவற்றிற்கெல்லாம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த பத்து மசோதாக்களில் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக இருக்கக்கூடிய ஆளுநர்களை நீக்கி தமிழ்நாடு முதலமைச்சர் வேந்தர்களாக இருப்பார்கள் என்பதுதான் பெரும்பாலான மசோதாக்களாக இருக்கின்றன.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பிற துறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் வந்து விடுகிறது. ஒன்றே ஒன்று பல்கலைக்கழகங்கள் மட்டும் ஆளுநர் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இப்பொழுது ஆளுநர்களை முற்றாக நீக்கி விட்டு அவர்களுடைய அதிகாரத்தை எடுத்து, அதிலிருந்து நீக்கிவிட்டால் ஆளுநர்கள் தற்போது வெறும் பொம்மை அளவிற்கு செயல்படும் நிலை ஏற்படும். தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே விதமான சட்டம் எப்படிப் பொருந்தும்? இது போன்ற சிக்கல்களை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை.
பல மசோதாக்களுக்கு கால தாமதம் ஆகிறது என்பது உண்மைதான். காலதாமதத்தை ஆளுநர்கள் தவிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மாநில அரசால் நிறைவேற்றக்கூடிய அனைத்து விதமான மசோதாக்களுக்கும் ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதைப் போன்ற ஓர் உத்தரவை உச்சநீதிமன்றம் விதித்திருப்பது சரியானது அல்ல; மிகவும் விசித்திரமானது.
இந்தியா என்ற ஒரு நாடு. இந்தியத் தேசத்தை முன்னிறுத்தித் தான் இந்திய அரசியல் சாசனம் இருக்கிறது. இந்தியத் தேசத்தை நிர்வகிப்பதற்காகத்தான் மாநில அரசுகள் உருவாக்கப்பட்டன. மாநிலங்களால் இந்திய அரசு உருவாக்கப்படவில்லை. அதைப் புரியாமல் தான் பலர் தமிழகத்தில் பேசி வருகிறார்கள். அதாவது மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தாங்கள் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் கொடுக்க மறுக்கிறார் என்பதற்காக பல மாநில அரசுகள் இத்தீர்ப்பை வரவேற்கலாம். ஆனால், எதார்த்தத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கி இருக்கக் கூடிய தீர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்து அதிகாரங்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது சரியானதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல் சாசனத்திற்கு ஆபத்தாக முடியும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தீர்மானங்களை நிறைவேற்றி ஆளுநரைக் கையெழுத்திட வலியுறுத்துவார்கள் அல்லது சட்டம் தானாக அமலுக்கு வந்ததாகக் கருதப்படும். ஆளுநர் ஒப்புதல் தரவில்லையென்றால் இரண்டு நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அதற்கு நாங்கள் ஒப்புதல் தருகிறோம் என்று கூறுவது தவறான நடைமுறை.
இன்று வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பு அப்படியே அமலுக்கு வரும் என்று கருதவில்லை. மத்திய அரசு உடனடியாக மேல்முறையீட்டுக்குச் செல்லும். மூன்று அல்லது ஐந்து நீதிபதிகள் சேர்ந்து அரசியல் சாசனத்தின் படி ஆளுநருக்கான அதிகாரங்களை மறுவரையறை செய்வார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்தபின் தான் இது அமலுக்கு வரும். இது மிக மிக ஆபத்தான போக்கு. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவைகள் எல்லாம் எந்தத் தேதியிலிருந்து அனுப்பப்பட்டதோ அந்தத் தேதியிலிருந்து அதை அமலுக்கு வரும் என்பதெல்லாம் மிக மிகத் தவறானது; நீதிமன்றங்கள் தங்களுடைய எல்லையைத் தாண்டி ஒரு தீர்ப்பைக் கொடுத்துள்ளது.