இனி தமிழகத்திலும் மும்மொழிக்கொள்கை..!!
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் தமிழகத்திலும் மும்மொழிக்கொள்கை அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, CBSE பள்ளிகளில் படிக்கும் 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இடைநிற்றல் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புதிய பாடத்திட்டம் தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின் படி, மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை 3 மொழிகளை கற்று இருக்க வேண்டும் எனவும், 3-வது மொழியாக ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 38 மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 8 ஆம் வகுப்பில் 3 வது மொழியில் தோல்வியுற்றால், 9-ம் வகுப்பில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்றும், ஒருவேளை அப்போதும் தோல்வியுற்றால் 10 ஆம் வகுப்பில் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 3 வது மொழியில் தேர்ச்சி பெறாதவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுகுறித்து அனைத்து CBSE பள்ளிகளுக்கும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம் தமிழகத்திலும் மும்மொழிக்கொள்கை அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது